×

விஸ்வரூபம் எடுக்கும் கேரள தங்கக்கடத்தல் வழக்கு: என்.ஐ.ஏ விசாரணையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம்...!!

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் வழக்கில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். கேரளாவில் புயலை கிளப்பி வரும் தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளி சந்தீப், சரீத் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனை 3 முறை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே திருவனந்தபுரத்தில் அதிகாரியிடம் 5 மணி நேரமாக விசாரணையானது நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடந்த 27ம் தேதி கொச்சிக்கு அழைக்கப்பட்டு அங்குள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையாது நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, 56 கேள்விகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவுடன் எவ்வாறு நட்பு ஏற்பட்டது என வினவியுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்வப்னாவின் அடுக்குமாடி வீட்டில் ஒரு நாள் இரவு விருந்து நடைபெற்றது. அப்போது, அதில் மதுவும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி பின்னர், தனக்கு ஏதும் நியாபகம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஸ்வப்னா அதிகாரியை தன்வசபடுத்துவதற்காக மதுவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல் விருந்து நடைபெற்ற பகுதியில் உள்ள சிலரும் விருந்து குறித்து பல்வேறு தகவல்களை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

மேலும், சிவசங்கரனின் நண்பர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரி தங்கக்கடத்தல் கும்பலிடம் ஏமாந்துவிட்டார் என என்.ஐ.ஏவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆகையால் மதுபோதையில் மயங்கிய அதிகாரி சிவசங்கரன், தங்கக்கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், துபாயிலிருந்து தூதரகம் பெயரில் வந்த தங்கக்கட்டிகளை, சுங்க அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். அப்போது ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் சுமார் 12 முறை ஐ.ஏ.எஸ் அதிகாரி பேசியுள்ளார். அதுதொடர்பான ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த தங்கக்கடத்தல் மூலம் வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டிருக்குமா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி கடந்த ஓர் ஆண்டில் எந்தெந்த வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றுள்ளார், அதில் அரசு பயணங்கள் எத்தனை? , தனிப்பட்ட பயணங்கள் எத்தனை? என பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டில் இருந்து தங்கக்கட்டிகளை அனுப்பிவைத்துள்ள பைசல் பரீத் மற்றும் ராபின்ஸ் ஆகியோர் உதவியுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாரா? என அது தொடர்பான தகவல்களை அளிக்குமாறும் இதர புலனாய்வு அமைப்புகளிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கோரியுள்ளார். இதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தொடர்ந்து சிக்கல் வலுத்து வருவதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவதாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Sivasankaran ,investigation ,Kerala ,NIA , Kerala gold smuggling case: IAS officer Sivasankaran's sensational confession in NIA investigation ... !!
× RELATED கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!