×

ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும் : பாஜக எம்.பி. ஜாஸ்கவுர் மீனா கருத்து!!


ஜெய்ப்பூர் : ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்கு முரணான மற்றும் போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா அவர்களின் பேச்சு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஆகஸ்ட் 5 ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் ஆரம்பித்த உடனேயே கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஆன்மீக சக்தியின் மீதும் கடவுளின் சக்தியும் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமர் கோவில் அயோத்தியில் கட்ட ஆரம்பித்த உடனேயே கொரோனாவின் அழிவு ஆரம்பமாகும், என்றார். இதே போன்று கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநில சட்டசபை சபாநாயகரும் பாஜக தலைவருமான ராமேஸ்வர் சர்மா ஒரு கருத்தை கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த வாரம் ‘பாபிஜி அப்பளம்’ என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல அனுமன் மந்திரத்தை தினமும் சொன்னால் கொரோனா ஓடிடும் என்று  பாஜ எம்பி பிரக்யா தாகூர் கூறியிருந்தார். கொரோனாவால் மக்கள் அல்லல்படும் நிலையில் பாஜகவினர் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.


Tags : Ram temple ,Corona ,BJP , Ram Temple, Corona, BJP MP , Jasgaur, Meena, Comment
× RELATED ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி