×

தொழில் போட்டியால் தகராறு கத்தியால் குத்தி பிச்சைக்காரர் கொலை: சக பிச்சைக்காரர் கைது

சென்னை: தொழில் போட்டி காரணமாக சக பிச்சைக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையோரம் அதிகளவில் பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.  இவர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மெரினா கடற்கரை மற்றும் ஐஸ்அவுஸ் பகுதிகளில் பிச்சையெடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் தனியாக சங்கம் வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிதாக வெளியாட்கள் யாரும் அவர்கள் பகுதியில் பிச்சை எடுக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் ஒற்றுமையாக பிச்சையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கம் முன்பு உள்ள நடைபாதையில் 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புதிதாக பிச்சை எடுத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வாலாஜா சாலையோரம் தூங்கி உள்ளார். அப்போது அந்த பகுதியில் வழக்கமாக பிச்சை எடுத்து வசித்து வரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயசந்திரன் (47) என்பவர் வந்துள்ளார். தனது இடத்தில் வேறு ஒருவர் தூங்குவதை பார்த்த அவர், ‘‘இது எனது இடம். இங்கு நீ எப்படி தூங்கலாம்,’’ என அந்த நபரிடம் தகராறு செய்துள்ளார்.

அதற்கு அவர், ‘‘இது அரசாங்க இடம். இங்கு நான் தூங்குவேன், பிச்சையெடுப்பேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீ யார் அதை கேட்பதற்கு,’’ என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயசந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அந்த நபரை குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பிச்சைக்காரர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜெயசந்திரனை கைது செய்தனர்.

Tags : Beggar ,death ,rival , Professional rivalry, dispute, stabbing, beggar murder, fellow beggar, arrest
× RELATED ‘‘பிச்சையேற்கும் பரமன்”