×

மருந்தோ, தடுப்பூசியோ இல்லாததால் தமிழகத்தில் 116 இடங்களில் கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இந்திய அளவில் தமிழகத்தில் மட்டும் 116 இடங்களில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று இதுவரை 1,62,849 பேர் குணமடைந்து உள்ளனர். 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை படிப்படியாக குறைக்கும் வகையில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவாக 116 இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,150 தொழிற்சாலைகளிலும், 26 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலம்  பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருவதால் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக விலகலை கடைபிடித்தும், கிருமி நாசினி மூலம் கையை கழுவி முறையாக பராமரித்து வந்தாலே, தொற்று நோயை ஓரளவு குறைக்க முடியும்.

சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் யாரும் பயப்பட வேண்டாம். தொடர் சிகிச்சை மூலம் நோயை கட்டாயம் குணப்படுத்த முடியும். அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே நோய் தொற்றை கட்டாயம் தடுக்க முடியும். இந்த நோய்க்கு தனியாக மருந்தோ, தடுப்பூசியோ இல்லாத நிலையில், அதிக அளவில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில்தான் விலை உயர்ந்த மருந்துகளை மாவட்டம் தோறும் தமிழக அரசு அனுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அரசி ஸ்ரீவத்சவ், துணை இயக்குனர்கள் பிரபாகரன், ஜவஹர்லால் மற்றும் அரசு மருத்துவர்கள் உடனிருந்தனர். 


Tags : testing ,places ,Corona ,Tamil Nadu ,Radhakrishnan ,Health Secretary ,Radhakrishnan Corona , Drug or vaccine, corona test at 116 locations in Tamil Nadu
× RELATED மருந்து சோதனை ஆய்வகத்தில் இளநிலை...