×

சேமிப்புக்கு வேட்டு வைத்த கொரோனா பிஎப் பணம் ரூ.30 ஆயிரம் கோடி காலி: 80 லட்சம் பேர் பணத்தை எடுத்தனர் அடுத்த ஆண்டு வட்டி குறையும் அபாயம்

புதுடெல்லி: கொரோனா காலத்தில் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி சேமிப்பு பணத்தை பி.எப்.பில் இருந்து 80 லட்சம் பேர் எடுத்துள்ளனர். நோய் தொற்று அதிகரித்து வருவதால் மேலும் 20 லட்சம் பேர் தங்கள் சேமிப்பில் கைவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு பி.எப். சந்தாதாரர்களுக்கு தரப்படும் வட்டி குறையும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த ஜனவரி இறுதியில் இந்தியாவில் கால் பதித்த கொரோனா, இன்று வேரூன்றி கிளை பரப்பி நாடு முழுவதும் பரவிவிட்டது. கொரோனாவை தடுக்க வேறு வழிதெரியாமல் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு, நோய் தொற்றை தடுக்காமல் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும், வேலையின்மை, தொழிலில் நஷ்டம் என்ற குரல் ஒலிக்கிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் கடும் பண நெருக்கடியில் மக்கள் இருப்பதால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து அவசர தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஒவ்வொருவரும் 3 மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை எடுத்துக்கொள்ளலாம் என்று கடந்த மார்ச் 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை பி.எப். கணக்கில் இருந்து 80 லட்சம் சந்தாதாரர்கள் எடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதில், 30 லட்சம் பேர் கொரோனா பேரிடர் கால சலுகையை பயன்படுத்தி ரூ.8 ஆயிரம் கோடியை எடுத்துள்ளனர். மருத்துவச் செலவுக்கு என்று கூறி ரூ.22 ஆயிரம் கோடியை 50 லட்சம் பேர் எடுத்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அடுத்த சில மாதங்களில் மேலும் 20 லட்சம் பேர் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருங்கால வைப்பு நிதி என்பதே வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகான வாழ்க்கைக்கான சேமிப்பு. ஆனால், கொரோனா கொடுத்த நெருக்கடியால் அந்த சேமிப்பில் கை வைக்க வேண்டிய அவல நிலைக்கு கிட்டதட்ட 1 கோடி பேர் தள்ளப்பட்டுள்ளதை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டும். பொருளாதாரத்தை சீரமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019-20ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடியை பி.எப். சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து எடுத்திருந்தனர். இப்போது 4 மாதத்திலேயே ரூ.30 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக பணம் பி.எப்.பில் இருந்து எடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பி.எப். நிதியில் 10 சதவீதம் ஆகும். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் பி.எப். நிறுவனத்தின் வருவாய் குறையும் என்றும் இதன் மூலம் சந்தாதாரர்களுக்கு கடந்த ஆண்டு தந்த 8.5 சதவீத வட்டி குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அபாய சங்கு ஊதுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பிஎப் நிறுவனத்திடம் சந்தாதாரர்களின் ரூ.10 லட்சம் கோடி பணம் உள்ளது. இதில், இந்த ஆண்டு மட்டும் ரூ. 1 லட்சம் கோடி வரை சந்தாதாரர்களால் எடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள பணம் 10 சதவீதம் குறைந்தால் பிஎப் நிறுவன முதலீடு குறைந்து வருவாய் குறைந்துவிடும். இதனால் சந்தாதாரர்களுக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டியை நடப்பு நிதியாண்டுக்கு வழங்க முடியாத நிலை உருவாகும்.


Tags : Corona PF , Search for savings, The Corona BP money, Rs 30,000 crore, vacant, 80 lakh people, risk of interest reduction next year
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...