×

ஊரடங்கால் கிரிக்கெட் போட்டி இல்லை; கல் உடைக்கும் ‘மாஜி’ கேப்டன்: உத்தரகாண்ட் வீரருக்கு ஏற்பட்ட சோகம்

டெஹ்ராடூன்: ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாத நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியின் ‘மாஜி’ கேப்டன் உத்தரகாண்ட்டில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். உத்தரகாண்ட் மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ‘வீல்சேல்’ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மாற்றுத்திறனாளி ராஜேந்திர சிங் தாமி (34), கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது வாழ்வாதாரத்திற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் கல் உடைத்தல், குளம் தூர்வாருதல் போன்ற வேலை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வீல்சேர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனது கல்வித்தகுதிக்கு ஏற்ப மாநில அரசு எனக்கு வேலை வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது. பிறந்த இடத்தில் தொடர்ந்து வாழ்வதற்கான தேவையை அரசு செய்து தரவேண்டும். அவ்வாறு செய்தால் யாரும் பிறப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டார்கள். எனது கிராமத்தில் இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாட்டின் எல்லைப் பகுதி மாநிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும்’ என்றார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஜய் குமார் கூறுகையில், ‘ராஜேந்திர சிங் தாமியின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அவருக்கு அரசு திட்டங்களின் கீழ் உடனடியாக நிதி உதவி வழங்கும்படி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : player ,cricket match ,Tragedy for Uttarakhand , Curfew, cricket match, stone breaking, ‘former’ captain
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...