×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் ஆகஸ்டு 15ம் தேதி தாக்குதல் நடத்தத் ஐஎஸ்ஐ திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆகஸ்டு 15ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. அங்கு கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை விசுவ இந்து பரி ஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க இந்த அறக்கட்டளை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவும் நிலையையும் மீறி நடக்க உள்ள  இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அங்கு ஆகஸ்டு 15ஆம் நாள் தாக்குதல் நடத்தப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக ரா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக லஷகர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. 5 குழுக்களை அனுப்பிப் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தி, உள்நாட்டுக் குழுக்களால் நடைபெற்ற தாக்குதல் போலத் தோற்றத்தை ஏற்படுத்த ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தத் தாக்குதலைத் தடுக்க டெல்லி, அயோத்தி, காஷ்மீர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : building ,ISI ,Ayodhya ,Ram temple ,terror attack , Ayodhya, Ram Temple, August 15, Attack, ISI, Intelligence
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...