சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசு நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துவர விரும்பும் நிறுவனங்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தொழிலாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியாற்றும் இடம், வாகன எண், தனிமைப்படுத்துவதற்கான இடம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை அந்தந்த நிறுவனங்கள் ஏற்க வேண்டும். தமிழகம் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த நிறுவனங்களின் செலவில் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டும்.
மீண்டும் பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் முகக்கவசங்கள் அணிவதையும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் மற்றும் அவர்கள் தங்கும் இடங்கள் காற்றோட்ட வசதியுடன் தூய்மையாக இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
