×

கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தல்: ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மாணவர்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி மெழுகுவர்த்தியை கொண்டு பல்வேறு விதமான ஓவியங்களை நகைக்கடை உரிமையாளர் வரைந்துள்ளார். அவற்றை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் மெழுகு ஓவியங்களை வரைந்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றி அற்புதமான மெழுகு ஓவியங்கள் வரைந்து வருகிறார்.

காகிதத்தில் பென்சிலால் ஓவியத்தை வரைந்து கொள்கிறார். பிறகு அதன்மேல் கண்ணாடியை வைத்து மெழுகை உருக்கி துளித்துளியாக விட்டு ஊசி மற்றும் பிளேடு கொண்டு செதுக்கி அற்புதமான ஓவியங்களை படைக்கிறார். இதில் கிருஷ்ணர் ராதா, சிவன் பார்வதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், குதிரைகள், கடல் உயிரினங்கள், தலைவர்களின் உருவங்கள் என பலவகையான படங்களை மெழுகுவர்த்தியை உருக்கி தத்ரூபமாக ஓவியங்கள் செய்து வருகிறார். இதுகுறித்து, விஜயகுமார் கூறுகையில், ‘நான் ஒரு சிறந்த ஓவியராக வர ஆசைப்பட்டேன். அதன் முதல் முயற்சியாக விலங்கியல் பட்டப்படிப்பு படித்தேன். மேலும், ஓவியராக ஆவதற்கு அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இதனால், கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறேன்.

தற்போது, ஊரடங்கு காலத்தால், என்னுடைய எண்ணத்தை மேலோக்கி ஓவியராக தொடர மீண்டும் முயற்சி செய்தேன். அதன் பலனாக மெழுகுவர்த்தியை கொண்டு ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும், இந்த ஓவியங்களை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதற்கான பயிற்சியை இலவசமாக கற்றுத்தர விரும்புகிறேன்’ என்றார்.


Tags : Corona , Corona curve, candle, painting, students
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...