×

மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து நிவாரணம் வழங்குக : ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரிய வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

சென்னை : மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 1000 ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில், ஒரு குடும்பத்தை சமாளிக்க 1000 ரூபாய் போதுமானதாக இல்லை எனவும், அரசு அறிவித்த நிவாரண தொகை அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய் சேரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.பொங்கல் காலத்தில் கூட ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 சதவீதமும், அமெரிக்கா 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு உத்தரவு!!

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா  அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால்,  பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்கு செல்கின்றனர்” என்பதை ஆங்கில நாளிதழை சுட்டிக்காட்டி தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு  தமிழக அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பழங்குடியினர் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags : inspection ,hill tribe areas ,Judges ,hill tribes , Hill Tracts, Tribals, Direct Inspection, Relief, Rs.10,000, Relief, Judges, Order
× RELATED குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை...