×

கூட்டுறவு சங்கங்கள் வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்: அரசுக்கு திமுக விவசாய அணி வேண்டுகோள்

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுக விவசாய அணி வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்ட அறிக்கை: தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் நியாய விலைக் கடை பணியாளர்கள்  உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஆளுகின்ற அதிமுக அரசு எந்த சலுகைகளையும் அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இப்படி தொழிலாளர் விரோத - விவசாய விரோத எடப்பாடி அரசை எதிர்த்து தொடக்க வேளாண் கூட்டுறவுச்சங்க செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது தொடங்கி இருக்கும் இந்த வேலைநிறுத்தத்தால் விவசாயக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் பாதிக்கப்படுவதோடு, குறுவை சம்பா சாகுபடி வேலைகள் நடக்கும் இந்த நேரத்தில், விவசாயத்திற்கு தேவையான உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்குவதும் பாதிக்கப்படும். மேலும், பொதுவிநியோக திட்டங்களும் முற்றிலும் முடங்கிவிடும்.

எனவே எல்லாப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவதைப்போல விவசாயப் பிரச்னைகளிலும் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டாமல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி, அவைகளை சுமுகமாக தீர்த்து வைப்பதன் மூலம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பாதிக்கப்பட்ட விவசாயப் பணிகளை தொடர போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : strike ,team ,government ,negotiations ,DMK , Co-operative Societies, Strike, Negotiation, Government, DMK Agricultural Team, Request
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து