×

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்ததால் மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்!!!

திருநெல்வேலி:  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலீஸ் தாக்கியதில் சண்முகம் என்பவர் உயிரிழந்ததால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காவல் துறை மற்றும் வனத்துறையினர் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சண்முகம் என்பவர் தூத்துக்குடி இரயில்வேயில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரை கடந்த 8ம் தேதி காவல் துறையினர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அனுமத்தித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற உறவினர்கள், சண்முகத்தின்  உடலை பார்த்தபோது அவரது உடலில் விபத்துக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என கூறியுள்ளனர். மேலும், காவல் துறையினர் விசாரணையின்பேரில் சண்முகத்தை அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சண்முகம் விபத்தில் இறந்துள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இதனை கண்டித்து உறவினர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் இந்த வழக்கை விபத்திலிருந்து கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை பாளையங்கோட்டை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags : Palayankottai ,Relatives ,hospital ,Nellai ,police attack , Relatives , hospital , police attack ,Palayankottai, Nellai district ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!