×

கர்நாடகாவில் அடுத்த அதிரடி...! பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ள மாநில அரசு அனுமதி

கொரோனா வைரஸ் பரவலை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த பெரு நகரம் என்ற பெருமையை பெங்களூரு வைத்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாக தொடங்கினர். இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை வரை பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுக்க முழுக்க ஊடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் இந்தநேரத்தில் இனி மாநிலத்தில் எந்தவிதமான ஊரடங்கும் இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ளலாம் எனவும் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிவாசல்களில் அதிகபட்சமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படலாம் எனவும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதுடன் மூத்த குடிமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழ வருபவர்கள் சொந்தமாக தொழுகை விரிப்பை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் ஒன்றாம் தேதி பக்ரீத் எனப்படும் ஈதுப் பெருநாள் கொண்டாடப்படும் என டெல்லி ஜுமா மஸ்ஜித் இமாம் அறிவித்துள்ள நிலையில், பல மாநிலங்கள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளன.

Tags : Karnataka ,mosques ,state government ,Eid , Karnataka, Eid Prayer, Mosque, State Government
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...