×

வடமாநிலங்களுக்கு ‘ரிக்’ வண்டிகளை சரக்கு ரயில்களில் கொண்டு செல்ல சோதனை ஓட்டம்: திருச்செங்கோட்டில் தொடங்கியது

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் ரயில் நிலையத்தில், வடமாநிலங்களுக்கு ரிக் வண்டிகளை சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஆழ்துளை கிணறு தோண்டும் ரிக் வண்டிகளின் மையமாக விளங்குகிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான ரிக் வண்டிகள், தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சென்று பணியில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் இருந்து சாலை வழியாக செல்லும் போது டீசல் செலவு அதிகமாகிறது. தவிர, வழியில் போக்குவரத்து துறையினரின் கெடுபிடி, சுங்கவரி,  வெளிமாநிலங்கள் விதிக்கும் வரி, போலீசாரின் சோதனை, ரவுடிகளின் தொல்லை ஆகியவற்றை சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால் செலவுகளை குறைக்கவும், இதர பிரச்னைகளை தீர்க்கவும் முடிவு செய்த உரிமையாளர்கள், சரக்கு ரயில்கள் மூலம் ரிக் வண்டிகள், உதவிக்கு செல்லும் லாரிகளை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல, மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரினர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து, திறந்தவெளி சரக்கு வேகன்களில் ராணுவ வாகனங்கள் கொண்டு செல்வது போல்,  ரிக் வண்டிகளையும் கொண்டுசெல்லும் சோதனை ஓட்டம் துவங்கியது. திருச்செங்கோடு அடுத்த ஆனங்கூர் ரயில் நிலையத்தில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சாய்வு தளம் வழியாக, ரிக் வண்டிகளை வேகன்களில் ஏற்றினர். இந்த ரிக் வண்டிகள் மின் கம்பிகள், நுழைவு பாலங்களில் செல்லும் போது உரசுமா எனவும், பல வகையான ரிக் வண்டிகளை ரயிலில் ஏற்றி சோதனையிட்டனர்.

இந்த சோதனை ஓட்டத்தை திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி, செயலாளர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், ராஜபாண்டி, அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். தமிழகத்தில் இருந்து ரிக் வண்டிகளை சரக்கு ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டுசெல்லும் போது 35 சதவீதம் செலவு குறையும் என்றும், தேய்மானம் இல்லாமல் பாதுகாப்புடன் கொண்டு செல்ல முடியும் எனவும் ரிக் உரிமையாளர்கள்  சங்க தலைவர் சீனிவாசா கந்தசாமி தெரிவித்தார்.

Tags : states ,Tiruchengode , Rick carriage, freight train, test run, Tiruchengode
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்