×

மதுரையில் ஒரு கீழடி?: உசிலம்பட்டி அருகே பழங்கால பொருட்களான முதுமக்கள் தாழி, பானைகள், எலும்புகள் கண்டெடுப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு தொல்லியல்த்துறை அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள உலைப்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முதுமக்கள் தாழி, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், விதவிதமான குடுவைகள் உள்ளிட்டவை இந்த பகுதியில் அதிகளவில் கிடைத்துள்ளன.

மலையடி வாரத்தில் பல ஊர்கள் இருந்ததாகவும், அங்கு உழவுத் தொழில் நடைபெற்றுள்ளது என்றும் தங்கள் முன்னோர்கள் கூறியிருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு  முன் செயல்பட்ட இரும்பு உருக்காலை, உழவுக்கு பயன்படுத்திய ஏர் கலப்பைகள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு தொல் பொருட்கள் தொடர்ச்சியாக கிடைத்து வரும் உலைப்பட்டியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருட்கள் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டியிலும் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Madurai ,Usilampatti , undercurrent, Madurai, Discovery, ancient artifacts, pots, bones,Usilampatti
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...