×

தங்கத்தை போலவே முதலீடு செய்ய ஆர்வம்; வெள்ளி விலை 10 நாளில் ரூ10 ஆயிரம் அதிகரிப்பு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சேலம்: தங்கத்தை ேபாலவே வெள்ளியிலும் முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால்  கடந்த பத்து நாட்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சேலம் தான் வெள்ளி பொருட்கள் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற இடமாக திகழ்கிறது. இங்கு வெள்ளி கால் கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி, குங்கும சிமிழ், டம்ளர், அஷ்டலட்சுமி குடம் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் கொல்கத்தா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.  

வெள்ளி தொழில் இத்தனை காலம் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சீரான முறையில் நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக, வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி முடங்கியது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் போனது. இதனால் வெள்ளி வியாபாரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உலகளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவசர தேவைக்காக தங்கம் வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களாக  வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி சேலத்தில் மட்டும் பல லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வெள்ளிக்கட்டியை பொறுத்தமட்டில் இந்தியாவின் தேவையை சீனா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 முதல்  30 டன் அளவுக்கு இந்தியாவுக்கு வௌ்ளி இறக்குமதி செய்யப்படுகிறது. இதை தவிர இந்தியாவில் ராஜஸ்தான்,டெல்லி,மகாராஷ்டிரா உள்பட ஒரு சில மாநிலங்களில் வெள்ளிக்கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு பொருள் விற்பனை இல்லை என்றால், அதன் விலை குறைவது தான் வாடிக்கையாகும்.

ஆனால் தங்கத்தை பொறுத்தமட்டில் உலக நாடுகள் தான் விலையை நிர்ணயம் செய்கின்றன.கொரோனா ெதாற்றால் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. அதனால் பல தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளியிலும் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹52 ஆயிரத்து 500 என விற்றது. கடந்த பத்துநாளில் விலை கிடுகிடுவென அதிகரித்து, நேற்று நிலவரப்படி ₹62 ஆயிரத்து 100 என விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் பழைய விலைக்கே வரவேண்டுமானால் கொரோனாவுக்கு முன்பு எப்படி தொழில் நடந்ததோ, அந்த நிலை மீண்டும் திரும்ப வேண்டும். தொழில் நிறுவனங்கள் சரிவர இயங்கினாலே, அனைவரின் கவனமும் தொழில் மீது போகும். அப்போது தானாக விலை குறையும். எனவே எதிர்வரும் நாட்களில் வெள்ளியின் விலை ஏற தான் வாய்ப்புள்ளது. விலை இறங்க வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Customers , Investment, silver, increase, shock customers
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...