×

போலி ஆவணங்கள் தயாரித்து 3 வாடிக்கையாளர்களின் ஷேர் மார்க்கெட் பிசினஸ் பணம் ₹45.67 லட்சம் மோசடி ஊழியர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி, டிச. 2: புதுவையில் போலி ஆவணங்கள் தயாரித்து 3 வாடிக்கையாளர்களின் ஷேர் மார்க்கெட் பிசினஸ் பணம் ரூ.45.67 லட்சத்தை மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி மிஷன் வீதியில் பிரபல தனியார் ஷேர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக ரத்தினவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்து லட்சக்கணக்கில் பணமுதலீடு செய்து ஷேர் மார்க்கெட் பிசனஸ் செய்து வருகின்றனர். இதனிடையே இந்நிறுவனத்தில் ஷேர் மார்க்கெட் பிசினஸ் மேற்கொண்டிருந்த சிலர் தங்களது பணமுதலீடு, இருப்பு குறித்த விபரங்களை சமீபத்தில் சரிபார்த்துள்ளனர்.

அப்போது தங்களது பெயரில் பணமில்லாதது குறித்த தகவல் வரவே அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி கிளை மேலாளரான ரத்தினவேலிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆய்வு செய்தபோது 3 நபர்களின் பெயரில் போலி ஆவணங்கள் (ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், போலி முகவரி, அடையாள அட்டை) ஆகியவற்றை தயாரித்து ஆள்மாறாட்டம் நடத்தி, போலிகளை உண்மையென நம்ப வைத்து அவர்களுக்குரிய ரூ.45 லட்சத்து 67 ஆயிரத்து 208ஐ நூதனமாக மோசடி செய்திருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அங்கு ஊழியராக பணியாற்றிய முத்தியால்பேட்டை, அம்பலவாணர் நகர், 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தரம் (46) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனிடையே பெரியகடை காவல் நிலையத்தில், ரத்தினவேல் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் 4 பிரிவுகளில் சுந்தரம் மீது மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ஷேர் மார்க்கெட் ஊழியரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணங்கள் தயாரித்து 3 வாடிக்கையாளர்களின் ஷேர் மார்க்கெட் பிசினஸ் பணம் ₹45.67 லட்சம் மோசடி ஊழியர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puduvai ,Dinakaran ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்