×

தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம், ஈச்சங்கரணை ஆகிய கிராமங்களை இணைக்கும் எல்லை பகுதியில் வயல்வெளிக்கு நடுவே தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க முடிவு செய்தது. அதன்படி, அந்த பகுதியில் புதிய டவர் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையறிந்த கருமாரப்பாக்கம், ஈச்சங்கரணை ஆகிய கிராமங்களை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மக்கள், டவர் அமைக்கும் இடத்துக்கு சென்று சமூக இடைவெளியுடன் ஆர்பாட்டம் நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘விவசாய நிலத்துக்கு இடையே இதுபோல் செல்போன் டவர் அமைப்பதால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த டவர் அமைக்கும் இடத்துக்கு அருகில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனை உள்ளது. இதனால், குடியிருப்பு வாசிகளுக்கும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். இங்கு, டவர் அமைப்பதை தடுக்க கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். எனவே, இப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டவர் அமைக்கக் கூடாது’ என்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : protest ,cell phone tower , Private cell phone tower, protest, public, demonstration
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...