×

சச்சின் பைலட், 18 எம்எல்ஏ.க்கள் மீது இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது: ராஜஸ்தான் சபாநாயகருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘ராஜஸ்தானில் சச்சின் பைலட், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,’ சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், அவரது துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை காங்கிரஸ் மேலிடம் பறித்தது. மேலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி, சபாநாயகரிடம் காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா புகார் அளித்தார்.

அதன் பேரில், இவர்கள் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதையடுத்து, சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்களும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஜூலை 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதுவரையில், பைலட் உட்பட 19 பேரின் மீதும் எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கக் கூடாது என கடந்த 21ம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் சி.பி.ஜோஷி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கும்படியும், பைலட் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதிக்கும்படியும் கோரினார்.

இதனை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபாநாயகருக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அனுமதி வழங்குகிறது. அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்படும் உத்தரவிற்கு கட்டுப்பட்டதாகதான் இருக்கும். மேலும், இது அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த விவகாரம் என்பதால், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது,’ என உத்தரவிட்டு, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், பைலட் மற்றும் 18ம் எம்எல்ஏ.க்கள் சபாநாயகருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் குப்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே அறிவித்தப்படி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு அளித்தனர். அதில், “இந்த வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக இணைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக விளக்கமளிக்க சபாநாயக்ருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்கும். அதுவரை சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் மீது மேற்கொண்டு சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,’’ என்று அறிவித்தனர். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

அதே நேரம், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பேரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இனி, இந்த வழக்கில் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் முழுவதுமாக கேட்கப்பட்டு பின்னர்தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரையில், முதல்வர் கெலாட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பாக காங். எம்எல்ஏக்கள் தர்ணா
ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, காங்கிரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இதற்காக, நேற்று மதியம் காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சி எம்எல்ஏக்களை 4 பஸ்களில் ஏ்ற்றிக்கொண்டு, ஆளுநர் மாளிகைக்கு கெலாட் சென்றார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘எங்கள் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் மறுக்கிறார். அவர் நெருக்கடியில் சிக்கியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்ட சரியான நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம்,’’ என்றார். ஆளுநர் மாளிகைக்கு  சென்ற கெலாட், சட்டப்பேரவையை கூட்டும்படி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து வலியுறுத்தினார். அதே நேரம், ஆளுநர் மாளிகைக்கு வெளியே எம்எல்ஏக்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநருக்கு வேறு வழியில்லை
ராஜஸ்தான் நிலவரம் பற்றி சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘உச்ச  நீதிமன்ற தீர்ப்புப்படி, அமைச்சரவை பரிந்துரைத்தால் ஆளுநர் சட்டப்பேரவையை கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. கொரோனா காரணத்தை கூறி, பேரவையை கூட்டுவதை தவிர்க்க ஆளுநருக்கு அதிகாரமில்லை,’ என்கின்றனர்.

பெரும்பான்மை உள்ளது
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்களுக்கு போதுமான எம்எல்ஏ.க்கள் பெரும்பான்மை உள்ளது. இதை எதிர்தரப்பும் அறிவார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை தொடங்கவும் நாங்கள் எப்போதும் தயங்க மாட்டோம். எங்களில் சில எம்எல்ஏக்கள் மட்டும் வெளிமாநில ஓட்டலில், வெளிமாநில போலீசார் மற்றும் பவுன்சர்கள் கண்காணிப்பில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். அவர்கள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டால் எங்களுடன் இணைய தயாராக இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன,’’ என்றார்.

மத்திய அரசும் மனுதாரராக சேர்ப்பு
சபாநாயகரின் பதவி பறிப்பு நோட்டீசை எதிர்த்து பைலட், 18 எம்எல்ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பைலட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிய கோரிக்கையை முன்வைத்தார். அதில், “இந்த விவகாரம் என்பது அரசியல் அமைப்பு சார்ந்தது என்பதால், மத்திய அரசையும் வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் தெளிவான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்,’’ என்று தெரிவித்தார். இதை நீதிபதிகள் ஏற்று, மத்திய அரசை மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர்.

Tags : Sachin Pilot ,Rajasthan ,ICC ,Speaker , Sachin Pilot, 18 MLAs, Final Judgment, Rajasthan Speaker, ICC
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...