×

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து

• 50 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
• 3 மணி நேரம் போராடி தீயணைப்பு

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரசாயன குடோனில் நேற்று காலை  திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பரவிய புகை மூட்டத்தால் 50 உள்நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, கண்டமனூர் விலக்கில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்நோயாளி பிரிவு அருகே, பழைய அம்மா உணவக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு தேவையான ரசாயனப் பொருட்கள், தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பினாயில், கெமிக்கல், கிருமிநாசினி, பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குடோனில் நேற்று காலை திடீர் தீ ஏற்பட்டு மளமளவென புகை வெளியேறியது. தகவலின்பேரில் ஆண்டிபட்டி, தேனி, போடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், ரசாயனப் பொருட்கள், தூய்மைப்பணியாளர்கள் பயன்படுத்தும் பொருட்கள் எரிந்து நாசாமாகின. நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்: தீ விபத்து நடந்த கட்டிடம் அருகே உள்நோயாளிகள் பிரிவு இருப்பதால், ஜன்னல் வழியாக ரசாயன புகை உள்ளே சென்றது. இதில், 50 உள்நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 3 வீரர்களும் மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கினர். உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டனர்.

Tags : Theni Government Medical College Hospital , Theni Government Medical College Hospital, sudden fire
× RELATED தேனி அரசு மருத்துவக்கல்லூரி...