×

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!: யு.ஏ.இ. தூதரகம் பேரில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள் திருச்சியில் விற்கப்பட்டது அம்பலம்..!!

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகளை திருச்சியில் விற்பனை செய்ததாக தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னாவின் கூட்டாளி பரபரப்பு வாககுமூலம் அளித்துள்ளார். கத்தாரில் தங்கியிருந்த போது ஸ்வப்னா 2வது திருமணம் செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து தூதரகம் பெயரில் கேரளாவுக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வந்து விற்பனை செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேநேரத்தில் என்.ஐ.ஏ. விசாரணையும் மற்றொரு பக்கம் சூடுபிடித்திருக்கிறது.

இப்படி வெளிநாட்டில் இருந்து தூதரகம் பெயரில் கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகளை தமிழகத்தில் விற்பனை செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தமிழகத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை அதிகாரிகள் யாரிடமும் விசாரணை மேற்கொள்ளாதது ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய கே.டி.ரமீஷ் என்ற ஹவாலா ஏஜெண்ட், தமிழகத்தை தங்கக்கடத்தல் வழித்தடமாக மாற்றியது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த தங்க கட்டிகளை திருச்சியில் விற்பனை செய்தோம் என அவர் வாக்குமூலம் அளித்திருப்பது இந்த சம்பவத்தின் திருப்பமாக கருதப்படுகிறது. திருச்சியை சேர்ந்த நகை கடை அதிபர்கள் தான் இந்த தங்கக்கட்டிகளை கே.டி.ரமீஷிடம் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. ஸ்வப்னா கூட்டாளிகளிடம் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை வாங்கி விற்பனை செய்வதையே திருச்சியில் உள்ள சில நகைக்கடை அதிபர்கள் வழக்கமாக கொண்டிருப்பதும் கே.டி.ரமீஷ் வாக்குமூலம் மூலம் உறுதியாகியுள்ளது.

அதோடுமட்டுமின்றி தங்களது கடத்தலுக்கான வழித்தடமாக தமிழகத்தை மாற்றிய அந்த கும்பல், மராட்டியத்தில் உள்ள சாங்லியில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்திருக்கின்றன. கே.டி.ரமீஷ் வாக்குமூலத்தை அடுத்து, ஸ்வப்னாவின் கூட்டாளிகளிடம் இருந்து தங்கக்கட்டிகளை பெற்ற நகைக்கடை அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.  

தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா 2வது திருமணம்:
தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா எத்தனை திருமணம் செய்துக்கொண்டார், அவர்களுக்கு எத்தனை கணவன்மார்கள் இருக்கிறார்கள் என்பதே விசாரணை அதிகாரிகளுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. தற்போது ஸ்வப்னாவை திருமணம் செய்துகொண்ட கணவர், எத்தனையாவது கணவர் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கேட்டுள்ளனர். அப்போது ஸ்வப்னாவுடன் தற்போது உள்ள கணவர் தமக்கு நெருங்கிய உறவினர்  என்ற தகவலை சிவசங்கரன் தெரிவித்திருக்கிறார்.

இதன்முலமே ஸ்வப்னாவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது. எனவே ஸ்வப்னாவின் கணவர் எந்த வகையில் சிவசங்கரனுக்கு உறவினர் என்பதை கண்டுபிடிக்கவும், அதோடுமட்டுமின்றி சிவசங்கரனின் உறவினர்கள் கேரளாவில் எந்தெந்த இடங்களில் உள்ளனர் என்ற விவரங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதேநேரத்தில் கத்தாரில் இருந்த போது, ஒருவரை இஸ்லாமிய முறைப்படி ஸ்வப்னா மணந்துள்ளார். எனவே கத்தார் நபர் யார்? அவருக்கும், இந்த தங்கக்கடத்தலுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

Tags : UAE ,Kerala ,embassy ,Trichy , Kerala gold smuggling case, UAE Gold ,Trichy ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...