×

எங்கிட்ட மோதாதே... குணமான போலீஸ்காரருக்கு மீண்டும் தொற்று

புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து ஒருமுறை மீண்ட போலீஸ்காரருக்கு மீண்டும் பாசிட்டிவ் முடிவு வந்திருப்பது மருத்துவ துறையை குழப்பியுள்ளது. டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் ஒரு போலீஸ்காரருக்கு (50 வயது) மே மாதம் கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. அங்கேயே சிகிச்சைக்கு சேர்ந்த அவருக்கு, அதே மாதம் 15, 22 தேதிகளில் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டுமே நெகட்டிவ் என வந்தது. ‘அப்பாடா... தப்பித்தோம்’ என மீண்டும் பணிக்கு திரும்பினார்.

கடந்த மாதம் 13ம் தேதி அதே அப்போலோ மருத்துவனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முகாமுக்கு நண்பருடன் அவர் சென்றார். அப்போது, 3 நாட்களாக தனக்கும் காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளது  எனக்கூறி பரிசோதனை செய்தார். ஏஜி கிட் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. அதை உறுதி செய்வதற்காக ஆர்டி-பிசிஆர்  எனும் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதிலும், தொற்று நூறு சதவீதம் உறுதியானது. இது, அவரை மட்டுமின்றி, மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது பற்றி டெல்லி அப்போலா மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ் சவ்லா கூறுகையில், ‘‘பாதிப்பு நீங்கிய ஒரு  மாதத்திற்குள் ஒருவருக்கு மீண்டும் பாசிட்டிவ் என முடிவு தெரிந்தால், உடலுக்குள்  தங்கியிருந்த செத்துப்போன கிருமி, ஒருவேளை மறுஉருவம் எடுத்திருக்கக்  கூடும் என்றும் கருத முடியும். ஆனால், இந்த போலீஸ்காரருக்கு 2 மாதத்துக்குப் பிறகு தொற்று உறுதியாகி இருப்பது மண்டையை குழப்புகிறது,’’ என்றார். அதே நேரம், ‘‘முதல் முறை அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என தவறாக  இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பற்றி மருத்துவ உலகம் தீவிர ஆய்வு நடத்த வேண்டும்,’’ என்கிறார் அவர்.

* பிளாஸ்மா சிகிச்சை கேள்விக்குறி
ஒருமுறை தொற்று ஏற்பட்டு குணமானால், மீண்டும் அந்த நபரை கொரோனா தாக்காது என்பது மருந்துவ உலகின் நம்பிக்கை. அதனால்தான், தொற்றில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மாவை பெற்று, நோயால் பாதித்த மற்றவர்களுக்கு அதை செலுத்தி சிகிச்சை அளிக்கும் யுக்தி இப்போது பின்பற்றப்படுகிறது. போலீஸ்காரருக்கு 2வது முறையாக கொரோனா தாக்கியுள்ள இந்த சம்பவம், பிளாஸ்மா சிகிச்சையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக டாக்டர்கள் கருதுகின்றனர்.

* இது ஒண்ணும் புதுசில்ல... டெல்லி மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில்  பணிபுரியும் நர்ஸ் ஒருவர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய சில நாட்களில் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
*  தென்கொரியா, சீனாவிலும் சிலருக்கு இதுபோல் மீண்டும் தொற்று ஏற்பட்டு ஏற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.


Tags : policeman , Enkitta Motade, healed police, again, infection
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...