×

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக தலா 2 மாஸ்க்: அடுத்த வாரம் வழங்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 மாஸ்க் இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி அடுத்த வாரம் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு துணி மாஸ்க் வழங்க பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்க 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி மாஸ்க் வாங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த மாஸ்க் கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணய குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையரும், இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்த குழுவில் இடம் பெற்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் தற்போது வேகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க வேண்டுமானால் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம், கொரோனாவுக்கு முன்பு வரை ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்ட மாஸ்க் விலை தற்போது ரூ.20 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வளவு விலை கொடுத்து பொதுமக்களால் வாங்க முடியாத நிலை உள்ளது.

மேலும், அடிக்கடி மாஸ்க்கை மாற்ற வேண்டும் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, நடுத்தர மக்களால் தேவையான மாஸ்க் வாங்க முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, விரைவில் தமிழக அரசு அறிவித்த இலவச மாஸ்க் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். அதன்படி, தமிழக மக்களுக்கு தலா இரண்டு துணி மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வாரம் துவங்கி வைப்பார் என்று வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முதல்கட்டமாக 4 கோடி மாஸ்க் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேருக்கு தலா இரண்டு முக கவசங்கள் வழங்கப்படும். அவை, மறு பயன்பாடு செய்யக் கூடிய துணி முக கவசங்களாக இருக்கும். முதல்கட்டமாக 4 கோடி முக கவசங்கள் தயாராக உள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள மாஸ்க் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலவச மாஸ்க் மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவக்கி வைப்பார்’ என்றார்.

Tags : family card holders ,Tamil Nadu ,ration shops , Tamil Nadu, Family Cardholder, Ration Shop, Mask
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...