திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், ஆடிப்பூர பிரம்மோற்சவமும் பிரசித்தி பெற்றதாகும். நாளை தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதற்காக நாளை அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் அம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. மாலை 5 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வளைகாப்பு நடைபெறும். வரும் 2ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நிறைவாக, வரும் 2ம் தேதி அம்மனுக்கு வளைகாப்பு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்களும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை கோயில் இணையதள நேரடி ஒளிபரப்பில் பக்தர்கள் தரிசிக்கலாம். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்கள், சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் நடக்கும். ஆனால், ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம் மட்டும் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் நடத்துவது தனிச்சிறப்பாகும்.