தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளை குறிவைக்கும் கொரோனா!: தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும், மாவட்ட அளவில் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சராசரியாக நாளொன்றுக்கு 300 பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே 4 அமைச்சர்கள் உட்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது 19வது  எம்.எல்.ஏ-ஆக கீதா ஜீவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். தூத்துக்குடியை பொறுத்தளவில் சண்முகபுரம், தாமோதரநகர், கூத்தங்கார்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>