டெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை திருவெற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் இறந்துவிட்டதால், காலியான இரு தொகுதிகளுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ஒரு எம்.பி. மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் பல மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்வதில் சிரமம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டதால் அந்த தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலையில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
