×

சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் வரி செலுத்துவோருக்கு இ-ஆபீஸ் திட்டம்: சுங்கத்துறை தலைமை ஆணையர் துவக்கி வைப்பு

சென்னை: சென்னை மண்டல சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் வரி செலுத்துவோரின் பயன்பாட்டுக்காக இ-ஆபீஸ் திட்டத்தை சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் கிருஷ்ணா ராவ் நேற்று துவக்கி வைத்தார். சென்னை மண்டல சுங்கத்துறை ஆணையர் மேல்முறையீடு-II அலுவலகத்தில் வரி செலுத்துவோரின் பயன்பாட்டிற்காக இ-ஆபீஸ் திட்டத்தை சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் கிருஷ்ணா ராவ் நேற்று துவக்கி வைத்தார். அப்போது சுங்கத்துறை ஆணையர் யமுனா தேவி மற்றும் உயர்அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பின்னர், சென்னை மண்டல முதன்மை ஆணையர் கிருஷ்ணாராவ் மற்றும் ஆணையர் யமுனா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இத்திட்டத்தின் மூலம் காகித முறையல்லாமல் மின்னணு முறையில் கையாள முடியும். இதன் மூலம் கோவிட் பாதிப்பிலிருந்து அலுவலர்களும் மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியும். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். சென்னை மண்டல சுங்கத்துறை ஆணையர் மேல்முறையீடு-II அலுவலகத்தில் வரி செலுத்துவோரின் பயன்பாட்டிற்காக இ-ஆபீஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவலியல் மையம் மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து அலுவலக நடவடிக்கைகளை காகித முறை இல்லாமல் மின்னணு முறையில் செயல்படுத்த முடியும். இதனால் அலுவலக பணிகளில் செயல்திறன் வெளிப்படைத்தன்மை அலுவலர்களின் சேவை மற்றும் நம்பத்தன்மை அதிகரித்து வரி செலுத்துவோர் சிறந்த சேவைகளை பெற உதவுகிறது.

இந்த இ-ஆபீஸ் மின் அலுவலக முறை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அலுவலக பணிகளில் பெரும் அணுகு முறை மாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அரசு அலுவலகங்களுக்குள் மற்றும் அரசு அலுவலகங்ளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் செயல் திறனும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலர்களின் செயல்பாட்டில் நம்பகத்தன்மையையும் தகவல்கள் பாதுகாப்பையும் நேர்மையான செயல்பாட்டையும் பெறுவதுடன் அலுவலக செயல்பாடுகளில் வரவேற்கத்தக்க மாற்றத்தை உணரலாம்.

இந்த இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுவதால் வரி செலுத்துவோர் இத்துறையை தொடர்பு கொள்ள மின்னணு முறைகளை பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் அனைத்து தகவல் பரிவர்த்தனைகளும் பிடிஎப் வடிவத்தில் பராமரிக்கப்படுவதால் இந்த துறைக்கு மின்னணு முறைகளில் அனுப்பப்படும் அனைத்து கடிதங்கள் மற்றும் தகவல் தொடர்புகளையும் பிடிஎப் வடிவத்தில் அனுப்பினால் ஏதுவாக அமையும். இந்த பிடிஎப் கோப்புகள் searchable mode  முறையில் இருந்தால் விரைவாக பரிசளிக்க ஏதுவாக இருக்கும்.

மேலும் வரி செலுத்துவோர் தங்களது கடிதங்களில் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் அவர்களது கடிதங்கள் மற்றும் இதர தகவல் தொடர்களுக்கான ஏற்பளிப்பு உடனடியாக மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏதுவாக அமையும். மேலும் அவர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு டைரி நம்பர் எனும் பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண் எதிர்கால தகவல் தொடர்புகளுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த பொது தகவல் குறிப்பை, பிராந்திய ஆலோசனைக்குழுக்கள் வர்த்தக சங்கங்கள் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சேம்பர்ஆப் காமர்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பரவலாக தெரிவிக்க வேண்டும். ஏதேனும் குறைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் இத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரலாம். இவ்வாறு கூறினர்.

Tags : Commissioner of Customs ,Chennai Customs Commissioner , Chennai, Office of the Commissioner of Customs, e-Office Project, Chief Commissioner of Customs, Initiative Deposit
× RELATED அதிகாரிகள் 20 பேர் கூண்டோடு...