×

அதிகாரிகள் 20 பேர் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு புதிய சுங்கத்துறை முதன்மை ஆணையர்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய சுங்கத்துறை முதன்மை ஆணையராக ராமாவத் சீனிவாச நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை முதன்மை ஆணையராக ஏற்கனவே மேத்யூஸ் ஜோலி என்பவர் பணிபுரிந்து வ்ந்தார். அவர் கூடுதலாக சென்னை விமான நிலைய சரக்கக பிரிவான கார்கோவுக்கும் முதன்மை ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக சுங்கத்துறையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமான பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த ஒரே விமானத்தில், 113 கடத்தல் குருவிகள் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து 13 கிலோ தங்கம் உட்பட 14 கோடி ரூபாய் மதிப்புடைய கடத்தல் பொருட்களையும், மத்திய வருவாய் புலனாய்வு துறை பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்திலும், சுங்கத்துறை வட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றிய 20 அதிகாரிகள் கடந்த வாரத்தில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள நிதி அமைச்சகம், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை புதிய முதன்மை ஆணையராக, ராமாவத் சீனிவாச நாயக் என்பவரை நியமனம் செய்துள்ளது. இவர் ஏற்கனவே சுங்கத்துறை தலைமையகத்தில், தணிக்கை பிரிவில் முதன்மை ஆணையாராக பணியில் இருந்தார். இதனால் சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்ககப்பிரிவு ஆகிய இரண்டிற்கும் சுங்கத்துறை முதன்மை ஆணையராக பணியில் இருந்த மேத்யூஸ் ஜோலி, இனிமேல் சென்னை விமான நிலைய சரக்கக பிரிவுக்கு மட்டும் முதன்மை ஆணையராக செயல்படுவார் என கூறப்படுகிறது.

சுங்கத்துறையில் இந்த திடீர் மாற்றம் குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘இது வழக்கமான மாற்றம் தான். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில், சர்வதேச விமான நிலையத்திற்கு தனி சுங்கத்துறை ஆணையரும், சரக்ககப் பிரிவுக்கு தனி சுங்கத்துறை ஆணையரும் பணியில் இருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, 2பிரிவுக்கும் சேர்த்து ஒரே சுங்கத்துறை ஆணையர் பணியாற்றினார். அதனால் அவருக்கு பணிச் சுமை அதிகமாக இருந்தது. இதையடுத்து தற்போது, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, தனியாக சுங்கத்துறை முதன்மை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.

The post அதிகாரிகள் 20 பேர் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு புதிய சுங்கத்துறை முதன்மை ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Chief Commissioner of Customs for ,Chennai Airport ,Chennai ,Ramawat Srinivasa Naik ,Chief Commissioner of Customs ,Chennai International Airport ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்