×

மாஸ்க் அணியாத வாலிபரை அடித்து கொன்ற போலீசார்: ஆந்திராவில் பதற்றம்

திருமலை: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம்,  கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் ரேஷன் கடை டீலர் மோகன். இவரது மகன் கிரண் குமார் (26). இவர், கடந்த 18ம் தேதி தனது பைக்கில்  சீராலாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது,  கொத்தப்பேட்டா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடிக்கு வந்தபோது, முகக் கவசம் அணியாததால் கிரண் குமாரின் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், போலீசார் அவரை தாக்கினர். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த கிரண் குமாரின் பெற்றோர் போலீசாரிடம் இருந்து கிரண் குமாரை அழைத்துச் சென்று சீராலா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். போலீசார் தாக்கியதால்தான், தங்கள் மகன் இறந்ததாக கூறி கிரண் குமாரின் பெற்றோரும், தாழ்த்தப்பட்டோர் நல சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். தகராறின்போது கிரண்குமார் குடி போதையில் இருந்த தாக போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து பிரகாசம் எஸ்பி சித்தார்த் கவுசில் கூறுகையில், ‘‘சம்பவம் பற்றி மாவட்ட அதிகாரிகளிடம் உரிய முறையில் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்,’’ என்றார்.

Tags : death ,teenager ,Andhra Pradesh Police ,Andhra Pradesh , Unmasked, youth, beaten, police: Tension in Andhra
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்