×

ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் தடுப்பு மருந்து 50% இந்தியாவுக்கே!

புதுடெல்லி: இங்கிலாந்தின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துக்கு ‘கோவிஷீல்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களிடம் நடத்திய முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனையில் இது மிக சாதகமான முடிவை கொடுத்துள்ளது. இதனால், உலக அளவில் இந்த மருந்து பெரிதும் நம்பிக்கையை தந்துள்ளது. இதன் 3ம் கட்ட மற்றும் இறுதி பரிசோதனை ஏற்கனவே பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை மற்றும் மருந்தை உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி அடர் பொன்னவாலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆகஸ்ட்டில் 3ம் கட்ட பரிசோதனை தொடங்கும். 5,000 பேரிடம் பரிசோதனை நடத்தப்படும். இந்த சோதனை அக்டோபர் அல்லது நவம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்ததும் டிசம்பர் இறுதிக்குள் 30 கோடி மருந்தை உற்பத்தி செய்து விடுவோம். இதில், 50 சதவீதம் இந்தியாவுக்கும், மீதமுள்ள மருந்துகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்,’’ என்றார். இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளில் உள்ள 300 கோடி பேருக்கு தேவையான தடுப்பூசியை தயாரித்து வழங்க, சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

* விலை ரூ.1000 மட்டுமே
கொரோனா தடுப்பு மருந்து விலை மலிவானதாக இருக்கும் என சீரம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தடுப்பூசியின் விலை ரூ.1000 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* அடுத்தாண்டுதான் கிடைக்கும்?
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கினாலும், அதனால் பலன் ஏற்படுகிறதா? இல்லையா? என்ற இறுதி முடிவு அக்டோபர் அல்லது நவம்பரில்தான் தெரிய வரும். அதன் பிறகே, மருந்து உற்பத்தியை சீரம் நிறுவனம் தொடங்க இருக்கிறது. இறுதி சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்தாண்டு ஜூன் மாததான்ம் இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags : India ,Oxford University , Oxford University, Vaccine, 50% for India!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!