×

தமிழின் முதுபெரும் எழுத்தாளரும், ஆய்வறிஞருமான கோவை ஞானி இன்று காலமானார்!

கோவை: தமிழின் முதுபெரும் எழுத்தாளரும், ஆய்வறிஞருமான கோவை ஞானி(86) இன்று காலமானார். இவருடைய மறைவு அனைத்து எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஞானி கோவை மாவட்டம் சோமனூரில்  1935ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்துள்ளார். இவரின் இயற்பெயர் கி.பழனிசாமி. கோவையில் ஞானி 30 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றி தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். மேலும், இவர் இலக்கிய ஆராய்ச்சி கட்டுரைகளையும், மார்க்சியக் கோட்பாடாய்வுகளையும் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தவர்.

கோவை ஞானி, மார்க்சிய ஆய்வாளரான என். நாகராஜனின் வழிகளை பின்பற்றி வாழ்ந்து வந்தவர். இவர் புதியதலைமுறை, நிகழ் மற்றும் தமிழ்நேயம் என பல சிற்றிதழ்களை நடத்தி வந்தவர். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது. இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் ஒன்றாக கருதப்பட்டு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.  

மேலும், 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்துள்ளார். இவ்வாறு பல படைப்புகளை உருவாக்கிய ஞானி(86) முதுமை மற்றும் உடல்நல குறைவால் கோவையில் இன்று பிற்பகல் காலமானார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். மற்றும் பலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

Tags : researcher , Kovai Gnani,passed away
× RELATED இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில்...