×

ஸ்வப்னா தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அமீரகத்தின் துணை தூதர் பாதுகாவலர் ஜெய்கோஷ் சஸ்பெண்ட்!

திருவனந்தபுரம்: தங்கராணி ஸ்வப்னாவின் தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அமீரகத்தின் துணை தூதர் பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். கேரள தங்கக்கடத்தல் வழக்கில் இதுவரை சுங்கத்துறையினர், சரித் குமார் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கின்றனர்.

அதேபோன்று தங்கராணி ஸ்வப்னா, அவரது கூட்டாளி சந்திப் நாயர் உள்ளிட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெளிநாட்டில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி அனுப்பி வைத்தது பைசல் பரீத் என தெரியவந்ததை அடுத்து, அவரும் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கக்கடத்தல் விவகாரம் அம்பலமானதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் சலானி நாட்டை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் வெளியேறிய உடனே அவருடைய துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருந்த ஜெய்கோஷும் மாயமானார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று கையில் நரம்புகள் அறுபட்ட நிலையில், ஜெய்கோஷ் மீட்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தங்கக்கடத்தல் விவகாரத்தில் தனக்கு கொலைமிரட்டல் வந்ததே இதற்கு காரணம் என்று கூறியதால் பரபரப்பு மேலும் அதிகமானது. எனவே ஜெய்கோஷ் எதற்காக தற்கொலைக்கு முயன்றார், அவரை மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஜெய்கோஷுக்கு கொலை முயற்சி வந்ததாக கூறப்படும் தகவல் பொய் எனவும், அவர் தன்னை காப்பாற்றி கொள்ளவே பொய் உரைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கேரள போலீசார் நடவடிக்கை எடுத்து தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதோடுமட்டுமின்றி துபாயில் இருந்து வந்த தங்கக்கட்டிகளை ஸ்வப்னாவின் அறிவுறுத்தலின் பேரில் ஜெய்கோஷே நேரடியாக பெற்றதும் தெரியவந்திருக்கிறது. எனவே ஸ்வப்னாவின் நெருங்கிய தொடர்பில் ஜெய்கோஷ் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மேலும்  ஐக்கிய அரபு அமீரக துணை தூதர் நாட்டை விட்டு வெளியேறும் தகவல் ஜெய்கோஷுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை அவர் முறைப்படி காவல்துறையைக்கு தெரிவிக்கவில்லை. அதோடுமட்டுமின்றி ஜெய்கோஷுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒப்படைத்ததிலும் விதிமீறல் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ஜெய்கோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Jaikosh Suspended ,United States ,Swapna ,Deputy Ambassador , Deputy Ambassador ,United States, Jaikosh ,Suspended , Swapna, Gold Smuggling Case!
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!