×

குருவிகளுக்காக 30 நாட்களாக இருளில் வாழும் கிராம மக்கள்

காளையார்கோவில்:  காளையார்கோவில் அருகே குருவிகளுக்காக கிராம மக்கள் 30 நாட்களாக இருளில் வசித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன.

தெருவிளக்குகளின் மொத்த கண்ட்ரோல் சுவிட்ச் இந்த பெட்டியில்தான் உள்ளது. இந்த சுவிட்சை ஆன் செய்ய வேண்டும் என்றால் குருவிக்கூடுகளை அகற்ற வேண்டும். இதனை அகற்ற மனமில்லாத கிராம மக்கள், குருவி முட்டை பொறித்து வளரும் வரை சுவிட்சை ஆன் செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக கிராமத்தில் தெருவிளக்குகள் எரியவில்லை. குருவிகள் வாழ்வதற்காக மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்த தகவல் தற்போது வலைதளங்களில் பரவியதால், கிராமமக்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், கருப்புராஜா ஆகியோர் கூறுகையில், ‘‘இப்போதைய நகர வாழ்க்கையில் குருவிகளை பார்ப்பதே அரிதாகி வருகிறது. அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த காலத்தில் வீட்டின் முற்றத்திலும், வாசல்களிலும் சுதந்திரமாக வந்து தானியங்களை கொத்தித்தின்ற குருவி இனம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கூடுகளை அகற்றாமல் இருளில் வசித்து வருகிறோம். குருவிகளுக்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் இருளில் வசிக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.


Tags : Eb , Villagers, darkness ,
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...