×

கொரோனா பரவலை தடுக்க காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு கட்டுப்பாடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க சென்னையில் மீன் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 15ம் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன. மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தபோதும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிரமங்கள் ஏற்படுவதால் அவற்றினை களைந்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்திடவும், சமூக இடைவெளியினை உறுதி செய்திடவும் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

* ஒரு நாளில் 50 முதல் 70 வரையிலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும்.
*  ஒரு நாளில் 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே மீன்பிடி இறங்குதளத்தில் மீன் விற்பனை அனுமதி.
* அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும்.
* பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* தினசரி 600 நடுத்தர மீன் விற்பனையாளர்கள் சிறிய மீன்களை கொள்முதல் செய்யலாம்.
* நடுத்தர வியாபாரிகள் 150 நபர்களை கொண்ட குழுவுக்கு துறைமுகத்திற்குள் அனுமதி. ஒரு குழு வெளியேறிய பின்னரே அடுத்த குழு மீன் கொள்முதல் செய்யலாம்.
* அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள்  துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
* தினசரி கடலுக்குள் செல்லும் மற்றும் கரை திரும்பும் விசைப்படகுகள் அனைத்து விவரங்களை மீனவர்கள் மீன்துறைக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
*  துறைமுகத்தில் காலை 8 மணிக்கு பின்னர் கரை திரும்பும் விசைப்படகு மீனவர்கள் மறுநாள் தான் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.
* விசைப்படகுகள் எக்காரணம் கொண்டும் நாட்டுப்படகுகள் விற்பனை செய்யும் இடத்தில் மீன் விற்பனை செய்யக் கூடாது.
* மீன்பிடி துறைமுகத்திற்குள் அன்றைய தினம் மீன் விற்பனை செய்யும் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* படகுகள் மற்றும் இயந்திரங்கள் பழுது பார்ப்பதற்காக செல்லும் தொழிலாளர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் மீன் விற்பனை முடிந்த பின்னர் மட்டுமே மீன்பிடி துறைமுகத்திற்குள் செல்ல வேண்டும்.
* மேற்கண்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேற்கண்ட நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : spread ,Government of Tamil Nadu ,Tamil Nadu , To prevent corona, in the port of Kasimedu, fish sales, control, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...