×

கேரள தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா வங்கி லாக்கர்களில் தங்க குவியல்: நீதிமன்றத்தில் என்ஐஏ அறிக்கை

திருவனந்தபுரம்: சொப்னாவின் வங்கி லாக்கர்களில் கிலோ கணக்கில் தங்கம் குவிந்து கிடக்கிறது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் என்ஐஏ, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட சொப்னா மற்றும் சந்தீப் நாயரின் ரிமாண்ட் அறிக்கை கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் விபரம் வருமாறு:
சொப்னா பல வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் பல கோடி முதலீடு செய்துள்ளார். பல வங்கி லாக்கர்களிலும் கிலோ கணக்கில் தங்கத்தையும் பணத்தையும் வைத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டி உள்ளது. சொப்னாவிடம் இருந்து 6 செல்போன்களையும் 2 லேப்டாப்களையும் கைப்பற்றி உள்ளோம். 2 போன்களை பேஸ் லாக் பயன்படுத்தி திறந்து பரிசோதித்தோம். அதில், தங்கம் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் உள்ளன. இவர் தனது கூட்டாளிகளுடன் பெரும்பாலும் டெலிகிராம் ஆப் வழியாகத்தான தகவல்களை பரிமாறி வந்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவோம் என்று அறிந்த உடன் சில முக்கிய தகவல்களை அவர் அழித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன் அழிக்கப்பட்ட தவல்களை மீட்டுள்ளோம். தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த கடத்தலுக்கு திருவனந்தபுரம் மட்டுமல்லால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வைத்தும் சதி திட்டம் நடந்துள்ளது. இந்த வழக்கில் ரமீசுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவருக்கு சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையில் ரமீசையும் குற்றவாளியாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகைக்கு தொடர்பு?
பைசல் பரீத் துபாயில் எண்ணெய் நிறுவனம், கார் ஒர்க் ஷாப் மற்றும் அதிநவீன உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். எப்போதாவதுதான் ஊருக்கு வருவார். மலையாளம், இந்தி திரையுலகை சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த ஆண்டு துபாயில் இவர் துவங்கிய அதிநவீன உடற்பயிற்சி மையத்தை இந்தி நடிகர் அர்ஜூன் கபூர் திறந்து வைத்தார். 4 மலையாள சினிமாக்களில் பைசல் பரீத் முதலீடு செய்துள்ளார். மேலும் முன்னணி நடிகை மற்றும் அவரது கணவரான இயக்குநருடனும் மிக நெருக்கம் இருந்துள்ளது. இவர்களிடமும் என்ஐஏ, சுங்க இலாகா விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. பைசல் பரீதிடம் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள், துபாயில் செல்வந்தர்கள் மட்டும் வசிக்கும் ராஷிதியாவில் சொகுசு பங்களா இருப்பதும் தெரியவந்துள்ளது.

சொப்னாவின் ரூ.26 லட்சம் மாயம்
சொப்னாவுக்கும், ஆலப்புழாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தலைமறைவாவதற்கு முன்பு இவரிடம் ஒரு பையை கொடுத்துள்ளார். இந்த பை சரித்குமாரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. வழக்கை என்ஐஏ விசாரிப்பதால் சிக்கிவிடுவோம் என கருதிய நகைக்கடை உரிமையாளர் பையை சரித்குமார் வீட்டில் வைத்திருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது. பையில் ரூ.14 லட்சம் இருந்தது. சொப்னாவிடம் விசாரித்தபோது ₹40 லட்சம் இருந்ததாக கூறினார். மீதி ரூ.26 லட்சம் எப்படி மாயமானது என்பது தெரியவில்லை. இது குறித்து நகை கடை உரிமையாளரிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது.

மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிப்பு:
சொப்னா, சந்தீப் நாயரின் என்ஐஏ காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இருவரும் நேற்று மாலை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் அப்போது, இருவரிடமும் மேலும் முக்கிய தகவல்கள் பெறவேண்டியுள்ளதால், 5 நாட்கள் காவல் நீட்டிப்பு கோரி என்ஐஏ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், 24ம் தேதிவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதற்கிடையே சுங்க இலாகாவும் இருவரையும் காவலில் எடுத்த விசாரிக்க என்ஐஏ நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

டிஜிபிகளுடன் நெருக்கம்?
சொப்னா திருவனந்தபுரம் ஏர் இந்தியாவின் சார்பு நிறுவனமான சாட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது அங்கு நடந்த ஊழல்கள் குறித்து மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்த ஷிபு என்ற ஊழியரை பழிவாங்க, இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த பினோய் ஜேக்கப்புடன் திட்டமிட்டு 12 பெண் ஊழியர்கள் மூலம் பாலியல் புகார் அளிக்கசெய்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷிபு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு  உத்தரவிட்டாலும் தனது செல்வாக்கால் வழக்குப்பதிவு செய்ய விடாமல் சொப்னா தடுத்து வந்தார். தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரியும்,  முன்னாள் டிஜிபியும் அவருக்கு உதவியுள்ளனர். 2 அதிகாரிகளையும்  விசாரிக்க என்ஐஏ  தீர்மானித்துள்ளது.

முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு செக்:
தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வருக்கும், அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் அமைச்சர்களின் ஊழியர்களுக்கு கடும் நிபந்தனைகளை விதிக்க கட்சி தலைமை தீர்மானித்துள்ளது. இன்னும் சில தினங்களில் அனைத்து அமைச்சர்களின் அலுவலக உதவியாளர்களை அழைத்து பேச, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் தீர்மானித்துள்ளார்.

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரள இடதுசாரி அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் அலுவலகத்துக்கும் சதிக்கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது. பல அமைச்சர்களுக்கும், சபாநாயகருக்கும், உயரதிகாரிகளுக்கும் கூட தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு இருக்கிறது. தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் என்ன நடக்கிறது என்பதுகூட முதல்வருக்கு தெரியாமல் இருப்பது அவமானமாகும். எனவே பினராய் விஜயன் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாமீன் கோரி மனு
சொப்னா கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தங்கம் கடத்தல் வழக்கில் அரசியல் லாபத்திற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையோன அரசியல் மோதலால் தான் இந்த வழக்கை என்ஐஏ ஏற்றுக்கொண்டது. தங்கம் கடத்தலுக்காக பணம் திரட்டியதிலோ சதிதிட்டம் தீட்டியதிலோ தீவிரவாத கும்பலுடனோ எனக்கு எந்த தொடர்பும் இல்லை. துணை தூதர் கேட்டுக்கொண்டதால்தான் பார்சலை அனுப்ப நான் சுங்க இலாகா உதவி கமிஷனரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் தங்கம் இருப்பது எனக்கு தெரியாது, இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாததால் எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kerala ,court ,Sopna Bank , Kerala, Gold Smuggling Case, Sopna Bank, Locker, Gold Pile, Court, NIA Report
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு