×

ஈரோடு அருகே பணம் பெற்றுக்கொண்டு போலி நில உரிமை சான்று தயாரித்தவர் கைது!: போலீசார் நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் போலியாக நில உரிமை சான்று தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கம்பியூட்டர் சென்டர் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவிரிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரே கைது செய்யப்பட்டவராவார். நம்பியூரில் கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்த இவர், கோப்பம்பாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் 5 ஏக்கர் நிலத்திற்கு வட்டாட்சியரிடம் நில உரிமை சான்றிதழ் பெற்று தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார்.

இதையடுத்து ராமசாமி தனது கணினி மூலம் போலி சான்றிதழ் தயாரித்து திருமூர்த்தியிடம் வழங்கியிருக்கிறார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கம்பியூட்டர் சென்டர் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலி அரசு முத்திரையுடன், வட்டாட்சியர் கையெழுத்திட்டு போலியாக சான்று தயாரித்து தந்தது தெரியவந்தது. மேலும், வருவாய், பத்திர பதிவு, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் முத்திரைகளை தயார் செய்து, போலி சான்றிதழ் வழங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து ராமசாமியை ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட போலி அரசு முத்திரைகள், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, யார் யாருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தார்? சான்றிதழ் பெற்றவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Tags : Erode Police ,land title dealer , Police arrest fake land title dealer near Erode
× RELATED கோடை விடுமுறையில் குவியும் சுற்றுலா...