×

கொரோனாவால் பக்தர்களுக்கு தடை ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய திருமூர்த்திமலை

உடுமலை:  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டதால் திருமூர்த்திமலை நேற்று வெறிச்சோடியது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் இங்கு அதிகளவில் வருவார்கள். பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
குறிப்பாக, தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பழனி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் விவசாயிகள் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் திருமூர்த்திமலைக்கு வந்து, திருமூர்த்தி அணையின் கரையோரம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள்.

இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்திலும் பக்தர்கள் யாரும் திருமூர்த்திமலைக்கு வரக்கூடாது என்றும், நீர் நிலைகளில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது என்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று பக்தர்கள் யாரும் திருமூர்த்திமலைக்கு வரவில்லை. இதனால், அப்பகுதி வெறிச்சோடியது. பூசாரிகள் மட்டும் கோயிலில் வழக்கமான பூஜைகளை செய்தனர். இதுபோல், அமராவதி ஆற்றின் கரை அணை கொழுமம் பகுதியிலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க யாருமே வராத நிலையில் ஆற்றின் கரைகள் ஆள் ஆரவமின்றி காணப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக கொமரலிங்கம் போலீசார் அமராவதி நதிக்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : moon ,devotees ,Corona ,Thirumurthymalai , Corona, Audi Amavasai, Thirumurthymalai
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...