×

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை எதிர்த்து வழக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறும் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக 1904ம் ஆண்டு துவங்கப்பட்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வேலூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இது சம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என வாதிட்டார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வங்கியை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால், பிறகு ஏன் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ரிசர்வ் வங்கி வழங்கியது எனக் கேள்வி எழுப்பி, வழக்கை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க தேவையில்லை. அதேபோல தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பதில்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மனுதாரர் சங்கங்கள் தனியாக உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags : RBI ,Chennai High Court ,banks ,takeover , Co-operative Bank, Reserve Bank, case against, interim injunction not available, Chennai High Court
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...