×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இடுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனீ, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(21.07.2020) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கம் பகுதியில் 10 செ.மீ மழையும், கரூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் சாத்தனூர் அணை, வால்பாறை, கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும், மன்னார்குடி, வெட்டிக்காடு பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அண்ணா பல்கலை, மரண்டஹள்ளி, நாகப்பட்டினம், பள்ளிப்பட்டு, திருத்துறைப்பூண்டி, பவானிசாகர், காரைக்கால் மற்றும் கன்னிமார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூலை 20, 21ம் தேதிகளில் குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 21ம் தேதி கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 23, 24ம் தேதிகளில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 20 முதல் 24ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : thundershowers ,Chennai Meteorological Center ,districts ,Tamil Nadu , Atmospheric mantle circulation, Tamil Nadu, thunder, rain, Chennai Meteorological Center
× RELATED 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில்...