×

கொரோனா பரிசோதனையின் போது போலி முகவரி கொடுத்து தினசரி 100 பேர் எஸ்கேப்: காவல் துறையில் புகாரளித்து தேடும் பணியில் மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனையின் போது, தினசரி 100க்கும் மேற்பட்டோர் போலியான முகவரியை கொடுத்து எஸ்கேப் ஆகிவிடுவதாகவும், இவர்கள் மீது போலீசில் புகார் அளித்து தேடி வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பரிசோதனை மையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவு வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்  என்று மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வழக்கம் போல் பணியினை மேற்கொள்ளலாம். தொற்று உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் தினசரி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த முறையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 2 லட்சத்து 64 ஆயிரத்து 366 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 41 பேர் 14 நாட்கள் நிறைவு செய்துள்ளனர். மீதம் 98 ஆயிரத்து 325 பேர் தற்போது தனிமையில் உள்ளனர். கொரோனா பாதித்தக்கபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 1 லட்சத்து 65,620 பேர், வெளி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 38 ஆயிரம் பேர், காயச்சல் முகாமில் பங்கேற்ற அறிகுறி உள்ள 25 ஆயிரம் பேர் என்று மொத்தம் நேற்று வரை 3.62 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்பவர்கள் சோதனை முடிவுகள் வரும் வரை தனிமையில் இருக்க வேண்டும், என்ற உத்தரவின் அடிப்படையில் இவர்களின் வீடுகளின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அவ்வாறு, பரிசோதனை மையங்களில் இருந்து முகவரியை பெற்று மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டிக்கர் ஒட்ட செல்லும்போது தான், கொரோனா பரிசோதனையின் போது பலர் போலியான முகவரி அளித்தது தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 14ம் தேதி 11 ஆயிரத்து 539 பேர் சோதனை மாதிரிகளை அளித்துள்ளனர். இதில் 160 பேர் தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை அளித்துள்ளனர். 15ம் தேதி 11 ஆயிரத்து 402 பேர் மாதிரிகளை அளித்துள்ளனர். இவர்களில் 177 பேர் தவறான முகவரி அளித்துள்ளனர். 18ம் தேதி 10 ஆயிரத்து 243 பேர் மாதிரிகளை அளித்துள்ளனர். இவர்களில் 171 பேர் தவறான முகவரி அளித்துள்ளனர். இவ்வாறு தினசரி 100க்கும் மேற்பட்டோர் போலியான முகவரி மற்றும் செல்போன் எண்ணை அளிப்பதால், இவர்கள் அனைவர் மீதும் சென்னை மாநகராட்சி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : corona test ,Corporation , Corona test, fake address, daily 100 people, escape, police, reporting, searching, corporation
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...