×

முதுகுளத்தூர் அருகே குறியீடுகளுடன் 2 ஆயிரம் ஆண்டு பழமையான பானை ஓடுகள் கண்டெடுப்பு

மதுரை: முதுகுளத்தூர் அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான மான் கொம்புகள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் பண்ணைக்குட்டை தோண்டப்பட்டது. அப்போது அதிகளவில் பானை ஓடுகள் வெளிவந்ததாக அவ்வூரை சேர்ந்த தமிழாசிரியர் சண்முகநாதன் தெரிவித்த தகவலின்பேரில், இவருடன் இணைந்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கள ஆய்வு செய்தார். இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது: பண்ணைக்குட்டை தோண்டிய பகுதியில் ஒரு நுண்கற்காலக் கருவி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண் விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் மற்றும் குழவி, பெரிய செங்கல், குறியீடுகளுள்ள இரு  பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு இப்பகுதியில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பழம் பொருட்களைக் கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்து ஓர் ஊர் இங்கிருந்தது என அறிய முடிகிறது. இரு கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான ‘‘E, H’’ போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் ‘‘E’’  போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. இரலை மான், உழை மான் என இரு வகை மான்களுண்டு. இது உழை மானின் கொம்புகள். இவற்றை மருந்தாக பயன்படுத்துவர். இவ்வாறு அவர் கூறினார்….

The post முதுகுளத்தூர் அருகே குறியீடுகளுடன் 2 ஆயிரம் ஆண்டு பழமையான பானை ஓடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mudugulathur ,Madurai ,Mudukulathur ,Ramanathapuram district ,Mudukulathur… ,
× RELATED முதுகுளத்தூர் அருகே களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு