×

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் வேகமெடுக்கும் தொற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இல்லாத அவலம்: உயிரிழப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் இல்லாத காரணத்தால் நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதையடுத்து மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், சாலைகளில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது. மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

சென்னையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. இதை கட்டுப்படுத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கும் தலா 3 மண்டங்களாக பிரித்து பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர்களும் தினசரி சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். அவர்களுடன் அந்த மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்ள, சுகாதார துறை அதிகாரிகளும் சென்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த அமைச்சர்களின் பரிந்துரைகளை ஏற்று 17 நாட்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. தற்போது தொற்று எண்ணிக்கை தினசரி 1,200க்குள் கீழ் உள்ளது.

அதே நேரம் கடந்த 10 நாட்களாக சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இதற்கு, சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க முக்கியத்துவத்தை அரசு தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், தினசரி தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், கொரோனாவுக்கு பயந்து வீடுகளிலேயே இருப்பது அல்லது சென்னையில் முகாமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அதேபோன்று சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் மூத்த அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கள பணியில் ஈடுபடாமல், சென்னையில் இருந்தபடியே அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு வருகிறார்கள்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களே கொரோனா ஒழிப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள். அதனால்தான் கோவை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழக அரசும், சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற மாவட்டங்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். காரணம், சென்னையை போன்ற மருத்துவ வசதி மற்ற மாவட்டங்களில் இல்லை. அப்படி இருக்கும்போது கொரோனா தொற்று அதிகரித்தால் அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும்.

தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை தினசரி 65யை கடந்து வருகிறது. இதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சென்னை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். அதனால் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்களை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். முக்கியமாக அமைச்சர்கள் நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களிலேயே முகாமிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பதே நோய் அதிகம் பாதித்த மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : ministers ,districts ,Chennai ,corona spread ,corona outbreak , In other districts besides Chennai, corona spread, preventive measures, ministers, lack of officials, public fears as death toll rises.
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...