×

சொப்னாவின் தங்கம் கடத்தல் விவகாரம் 5 மாநிலங்களில் விசாரிக்க என்ஐஏ முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைதாகிறார்

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மூலமாக தங்க ராணி சொப்னா சுரேஷ் தங்கம் கடத்தியது பற்றி தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கடத்தப்பட்டு வந்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது. இந்த வழக்கில் வழக்கில் கைதான சொப்னா சுரேஷ் பற்றி தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டுமே இவர் 200 கிலோ தங்கம் கடத்தி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சொப்னாவையும், அவருடைய கூட்டாளி சந்தீப் நாயரையும் கைது செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சந்தீப் நாயரின் அருவிக்கரை வீட்டில்  நடந்த சோதனையில், தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்திய பாத்திரங்கள், எலெக்ட்ரானிக் பொருட்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்திய பிறகு பாத்திரங்கள் உள்பட பொருட்களை வீட்டிலேயே வைத்திருந்தார்.  வீட்டின் பின்புறம் ஆறு ஓடுகிறது. அங்கு ஒரு முட்புதரில் இருந்தும் சில பொருள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, தங்கம் கடத்தியதில் சந்தீப் நாயருக்கு உள்ள முக்கிய பங்கை என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர், 2 பேரையும் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.

மேலும், இந்த விசாரணையில் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் செயலாளராக இருந்த ஐஏஏஸ் அதிகாரி சிவசங்கருக்கு கடத்தலில் முக்கிய பங்கு இருப்பதற்கான பல ஆதாரங்கள் என்ஐஏக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. கடத்தல்  தங்கம் பார்சலில் வந்த அன்றும், அதன் பிறகான நாட்களிலும் சொப்னா மற்றும் மற்றொரு குற்றவாளியான சரித் குமார் ஆகியோருடன் பலமுறை சிவசங்கர் போனில் பேசியுள்ளார். நேரிலும் 3 பேரும் சந்தித்துள்ளனர். சொப்னா, சரித் குமார் எங்கெல்லாம் இருந்தார்களோ, அங்கெல்லாம் சிவசங்கரும் இருந்துள்ளார். இதனால், அவரை உடனே விசாரிக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது.

சிவசங்கர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அது கிடைத்தவுடன் சிவசங்கரை கைது செய்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. இதற்கிடையே, சிவசங்கர் கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். எதற்காக சென்றார்? உடன் யார் யாரெல்லாம் சென்றார்கள்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சிவசங்கர் தவிர கேரள அரசில் மேலும் பல அதிகாரிகளும் கடத்தலுக்கு உதவி செய்ததை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் விசா ஸ்டாம்பிங் செய்ய திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்குத்தான் வர வேண்டும். எனவே, தூதரக பார்சலில் வந்த தங்கம் இந்த மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று என்ஐஏவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த 5 மாநிலங்களுக்கும் விசாரணையை விரிவுபடுத்த என்ஐஏ முடிவு செய்துள்ளது. இந்த தங்கம் கடத்தலில் நேற்று முன்தினம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்து, ஜிப்சல், முகமது, முகமது அப்து ஷமீன் ஆகிய 3 பேர் கைதாகி உள்ளனர்.

* பைசல் பரீத் துபாயில் கைது
தங்கம் கடத்தல் வழக்கில் திருச்சூர் கொடுங்கலூரை சேர்ந்த 3வது குற்றவாளியான பைசல் பரீத் துபாயில் உள்ளார். இவரை கைது செய்ய  இன்டர்போல் போலீஸ் லூக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், துபாய் போலீசார் பைசல் பரீத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் அவர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

* நண்பரிடம் கொடுத்த ரூ.15 லட்சம்
சொப்னா தலைமறைவாக ஆவதற்கு உதவிய நண்பரிடம் ஒரு பேக்கை கொடுத்து சென்றுள்ளார். அந்த நண்பரை கண்டுபிடித்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடமிருந்து பேக்கை கைப்பற்றினர். அதில், ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது.

* பொய் பாலியல் புகார்
ஏர் இந்தியா நிறுவன ஊழியருக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் தெரிவித்தது தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு திருவனந்தபுரம் கன்டேன்மென்ட் போலீசில் சொப்னாவுக்கு எதிராக ஒரு புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரான பினோய் ஜேக்கப் என்பவர் மட்டுமே முதலில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குற்றப்பிரிவு போலீசார் சொப்னாவை 2வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

* சட்டத்தை மீறிய கேரள டிஜிபி
திருவனந்தபுரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தொடங்கப்பட்டது. 2017 ஜூன் மாதம் துணை தூதருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி கேரள டிஜிபிக்கு தூதரகத்தில் இருந்து கடிதம் வந்தது. சட்டப்படி வெளியுறவுத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே மாநில போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியும். ஆனால், கேரள டிஜிபி லேக்நாத் பெக்ரா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இவ்வாறு துணை தூதருக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஜெய்கோஷ் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

* சபாநாயகர் மீது குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் நெடுமங்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ திவாகரன் கூறுகையில், ‘‘கடந்த டிச. 31ம் தேதி சொப்னா மற்றும் சந்தீப் நாயர் ஒரு கார் ஒர்க்‌ஷாப் திறப்பதாக எனக்கும் அழைப்பு வந்தது. அதில் நான் தலைமை தாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக அவர்கள் என்னிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை. அந்த விழாவுக்கு நான் செல்லவில்லை. அதில் சபாநாயகரும் கலந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது ஒரு சாதாரண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறாகும்,’’ என்றார்.

* பினராயிடம் விசாரணை
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில் ‘‘முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் தங்கம் கடத்தலுக்கு உதவி புரிந்ததாக என்ஐஏ கைது செய்துள்ள முக்கிய குற்றவாளி கூறியுள்ளார். முதல்வர் அலுவலகத்தை  சேர்ந்தவர்கள் தேச விரோத கும்பலுக்கு உதவி செய்துள்ளனர். எனவே பினராய் விஜயன் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவரிடம் இது தொடர்பாக  விசாரணை நடத்த வேண்டும்,’’ என்றார்.

Tags : Sivasankar ,NIA ,Sopna ,states , Sopna, gold smuggling case, to be investigated in 5 states, NIA decision, IAS officer Sivasankar
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...