×

குற்றவாளிகளை கைது செய்ய சென்ற இடத்தில் மோதல்; என்ஐஏ அதிகாரிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: மேற்குவங்க காவல்துறை நடவடிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது பெண்கள் தாக்குதல் நடத்திய நிலையில், என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் பூபதிநகர் பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டில், 2022ம் ஆண்டு டிசம்பரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கடந்த மாதம் சம்மன் விடுத்திருந்தது. இதனிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இருவரை நேற்று அதிகாலை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களைச் செல்ல விடாமல் அப்பகுதி மக்கள் தடுத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

என்.ஐ.ஏ அதிகாரிகளின் வாகனங்களைச் சூழ்ந்துகொண்ட உள்ளூர் மக்கள், அவர்களை முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. சிலர் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப்படையினருடன் அப்பகுதியில் உள்ள பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறை வாகனங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் பூபதிநகர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட திரிணாமுல் நிர்வாகிகளின் குடும்பத்தினர் சிலர், நேற்றிரவு பூபதிநகர் காவல் நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து, என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக ஐபிசி பிரிவு 354-இன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பூபதிநகர் சம்பவம் குறித்து கூறுகையில், ‘என்ஐஏ மீது பெண்கள் தாக்குதல் நடத்தவில்லை. என்ஐஏ தான் தாக்குதலை நடத்தியது. நள்ளிரவில் பெண்களை சித்ரவதை செய்தால், அவர்கள் தலையில் முக்காடு போட்டு உட்கார்ந்து இருப்பார்களா? தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post குற்றவாளிகளை கைது செய்ய சென்ற இடத்தில் மோதல்; என்ஐஏ அதிகாரிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: மேற்குவங்க காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : NIA ,West Bengal Police ,Kolkata ,West Bengal ,Trinamool Congress ,Bhupatinagar ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...