×

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் மத்திய அரசு: பிஎஃப் சேமிப்பு பணத்தை பெற முடியாத தொழிலாளர்கள் வேதனை...!!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிப்பு ஒவ்வொரு நாளும்  மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.  ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை. எனவே, வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார இழப்புகளைச்  சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா காலத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெறுவதற்கு Covid-19 என்ற முறையை மத்திய அரசு இணைத்துள்ளது. மற்ற முறைகளான திருமணம், நோய்வாய்படுதல், வீடு கட்டுதல் ஆகியவற்றின் மூலம்  வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற 15 நாட்கள் ஆகிறது. இருப்பினும், Covid-19 என்ற முறையில் பணம் எடுத்தால் 3 நாட்களில் பெற மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. ஆனால், இதிலும், பல சிக்கல்கள் உள்ளன. வருங்கால வைப்பு நிதி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் பெயர் ஆகியவை ஆதார் கார்டிலும் இணையாக இருந்தால் மட்டுமே பணம் பெற முடியும்.

இதன் காரணமாக பல தொழிலாளர்கள் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை சரி செய்து பணம் பெற தபால் அலுவலகம் அல்லது ஈ-சேவை மையம் செல்ல வேண்டும். ஆனால்,  கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி இந்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொருளாதார இழப்புகளை சரிசெய்ய பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்து கொள்ளுமாறு  அறிவித்துள்ள மத்திய அரசு, சேவைகளை பெற வேண்டிய சிக்கல்களை சரிசெய்யவுள்ள வழிகளை அடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசின் இந்த செயல், பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலாக  உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக மொத்தம் 36.02 லட்சம் கோரிக்கை விண்ணப்பங்களுக்குத் தீர்வுகண்டுள்ளதாகவும், அதில் ரூ.11,540 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும்  மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : government , Federal government cradles child and cradles cradle: Workers who can't get PF savings money suffer ... !!!
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...