×

காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: போலீஸ், அதிகாரிகள் முகாமிட்டிருந்தும் பலனில்லை

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு ஓரளவு தளர்வு செய்யப்பட்டபின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவும் மீன்களை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்யவும் கடந்த 15ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 120 நாட்களுக்கு பிறகு காசிமேடு மீனவர்கள் கடல்களுக்கு சென்று மீன்பிடிக்க தொடங்கினர். சில கட்டுப்பாடுகளுடன் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், காசிமேடு துறைமுகத்தில் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கிச் செல்லத் தொடங்கினர். சமூக இடைவெளி இல்லாமல் ெநருக்கமாக நின்று மீன்களை பேரம் பேசி வாங்கினர். நேற்று அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளில் கரை திரும்பினர். அவர்களிடம் மீன் வாங்க மொத்த வியாபாரிகள் மட்டுமே வர வேண்டும் என்ற கட்டுப்பாடு காணாமல்போய்விட்டது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தும் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று முழு ஊரடங்கு என்பதால் சிறு வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு மீன்களை பேரம் பேசி வாங்கினர். பலர் முககவசம் அணியாமல் மீன் வாங்க வந்தனர்.

சமூக இடைவெளி எதுவும் கடைபிடிக்கப்படாததால் மீன் வாங்க வந்தவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அங்கு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் திணறினர். திருவிழா போன்று மீன் வாங்க மக்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் காசிமேடு துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு சில்லறை விற்பனை வியாபாரிகளும், பொதுமக்களும் அங்கிருந்து அகற்றப்பட்டனர். மொத்த வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், துறைமுக வாசலில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : rally ,protesters , Kacimettu, fish, crowd, police officers
× RELATED கடலூரில் பரபரப்பு செம்மண் ஏற்றி வந்த...