×

தமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி நாளை ஓய்வு; தாமத நீதியால் நானும் எனது குடும்பமும் பாதித்தது: ஆன்லைன் பிரியாவிடை நிகழ்ச்சியில் ஆர்.பானுமதி உருக்கம்

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ஆர்.பானுமதி நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட ஆன்லைன் பிரியாவிடை நிகழ்ச்சியில் ‘தாமத நீதியால் நானும் எனது குடும்பமும் பாதித்தது’ என்று நினைவுகளை உருக்கத்துடன் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி, நாளை (ஜூலை 19) ஓய்வு பெறுகிறார். இவர், 1988ம் ஆண்டில் தமிழகத்தில்  நீதிபதியாக பணியில் சேர்ந்தார். ஏப்ரல் 2003ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றார். நவ. 2013ல், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆக. 2014ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். நாளையுடன் (ஜூலை 19) அவர் ஓய்வுபெற உள்ள நிலையில் நேற்று அவருக்கு உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) சார்பில் காணொலி மூலம் பிரியாவிடை விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், ‘எனக்கு 2 வயதாக இருந்தபோது ஒரு பஸ் விபத்தில் நான் என் தந்தையை இழந்தேன். அந்த நாட்களில், நாங்கள் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. என் தாய் வழக்கை தாக்கல் செய்தார். நீதிமன்றம் நிவாரணம் வழங்கல் தீர்ப்பை பிறப்பித்தது. ஆனால் எங்களால் அந்தத் தொகையைப் பெற முடியவில்லை. நானும், என் விதவை தாயும், என் இரண்டு சகோதரிகளும் நீதிமன்ற தாமதத்தால் பாதிப்புக்கு ஆளானோம்.

மூன்று சகோதரிகளும் படிக்க வேண்டும் என்பதற்காக, எனது தாயின் முயற்சியால் நான் நீதித்துறையில் சேவையாற்றும்படி நேர்ந்தது. நீதித்துறையில் வழக்குகள் அதிகளவு நிலுவையில் இருப்பதால் பின்னடைவு  ஏற்படுவதாக மக்கள் அடிக்கடி புகார் கூறுகின்றனர். இந்த தாமதங்களை களைய  நேர்மறையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீதி அமைப்பை டிஜிட்டல்  மயமாக்குவதன் மூலம் நீதியை  எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகள் உதவியுள்ளன.  கடந்த காலங்களில் அதனை உணர முடிந்தது. மாவட்ட நீதிமன்றங்கள் முதல்  உச்சநீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் எனக்கு முன் ஆஜரான அனைத்து பார் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

நீதிபதி பானுமதி ஓய்வு பெறுவதற்கு முன்னர், கீழ் நீதிமன்றங்களில் இருந்து பதவி உயர்த்தப்பட்ட ஒரே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். நாளை இவர் ஓய்வுபெறவுள்ள நிலையில், இரண்டு பெண் நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் இயங்கவுள்ளது. ஆன்லைன் பிரியாவிடையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் எஸ்.சி.பி.ஏ தலைவர் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : judge ,Tamil Nadu Supreme Court , Tamil Nadu, Supreme Court, female judge, retire tomorrow
× RELATED செல்வாக்கு மிக்க இருவர் தன்னை...