×

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு மரண தண்டனை: பொதுமக்கள் போராட்டத்தால் ஈரான் அரசுக்கு நெருக்கடி

தெஹ்ரான்: எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாக  குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரான் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட தொடங்கியுள்ளதால் ஈரான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஈரான் நாட்டில் பொருளாதார தேக்கநிலை நீடித்து வருகிறது. ஈரானின் பணமதிப்பு குறைந்து, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார பிரச்னையை சரி செய்ய ஈரான் அரசு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலையை ஐம்பது சதவிகிதம் வரை உயர்த்தியது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.18க்கு விற்ற பெட்ரோல், ரூ.27ஆக விலை உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்ற அமிர் ஹூசைன் மொராடி, சயீத் டாம்ஜிடி மற்றும் மொஹம்மத் ராஜாபி ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஈரான் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை எதிர்த்து மூன்று பேருக்கும் ஆதரவாக ஈரானில் மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் ஈரான் அரசுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று கருதுகிறது. போராட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே அப்பாவி இளைஞர்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்துள்ளது என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய போராட்டமானது ஈரான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Crisis ,state ,Iranian , Death penalty, Iran
× RELATED 6 தமிழக மீனவர்களுடன் ஈரான் மீன்பிடி கப்பல் பறிமுதல்