×

கொரோனா தொற்று பரவலால் இழப்பை சந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள்; தொழிலை நடத்த முடியாமல் தவிப்பு

அறந்தாங்கி: சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்தியஅரசு ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமலாவதற்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு, கோயில் விழாக்கள், திருமண விழாக்களுக்காக நிறுவனத்திற்கு ஏற்றமாதிரி பல கோடி வரை வியாபாரிகள் பொருட்களை இருப்பு வைத்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அறிவித்ததால் தங்கள் நிறுவனங்களில் பொருட்களை இருப்பு வைத்த வியாபாரிகள், அதனை விற்பனை செய்ய முடியாமலும், விற்பனை ஆகாத பொருட்களை திருப்பி மொத்த வியாபாரிகளிடம் கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், கடைக்கு வாடகை கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் கடனாக பொருள்களை பெற்றவர்கள் கிரடிட் காலம் முடிவடைந்ததால், அவர்கள் வாங்கிய பொருள்களுக்கு தற்போது பணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் பல வியாபாரிகள் தங்கள் நிறுவனத்தை நடத்துவதற்கான அத்தியாவசிய தேவைக்காக அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் பல ஆண்டுகளாக தொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறா விட்டாலும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் குடும்பத்தை நினைத்து உதவிகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தமிழகஅரசு தற்போது ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியுள்ள போதிலும், பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அந்தந்த பகுதி வர்த்தகர்களே தாமாக முன் வந்து, சுய ஊரடங்கை கடைபிடித்து தங்கள் கடைகளை அடைத்து வருகின்றனர்.

இதனால் அரசு அறிவித்த ஊரடங்கு முடிந்தாலும் உள்ளூர் சூழ்நிலையால் தற்போது தொழிலை நடத்த முடியாததால் வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பால் வெளியூர்களில் பல்வேறு பணிகளில் இருந்தவர்கள் தற்போது சொந்தஊர் திரும்பியுள்ளனர். வருமானத்தை இழந்த அவர்கள் சாலை ஓரங்களில் தற்காலிக கடை வைத்து இளநீர், பழரசங்கள், முகக்கவசம், காய்கறி, போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பல இடங்களில் சுயஊரடங்கின் காரணமாக கடைகள் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டி உள்ளது. இதனால் நகரை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலை ஓரக்கடைகளில் பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுவதால் தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் கொரோனாவால் வேலை இழந்து சொந்தஊர் திரும்பியவரில் பலர், கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.

Tags : Businesses ,spread ,Suffering , Corona, Businesses, Suffering
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...