×

சென்னையில் தற்போது 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் தற்போது 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது  குறைந்து வருகிறது. நேற்று  ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் முன்பு 4,000 பரிசோதனை செய்தாலே 1,500 பேருக்கு பாசிட்டிவ் என்ற நிலை இருந்தது. தற்போது 13,000 பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. முதல்வர் உத்தரவு படி கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகிறோம்.
 
சென்னையில் நாள் ஒன்றுக்கு 13,000 பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், சென்னையில் கொரோனா தடுப்பிற்கு  ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மீண்டு வரவேண்டும், மக்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமானால் இயல்பு நிலை வரவேண்டும், மேலும் தளர்வுகளுக்கு தயாராகும் வகையில் பணிகளை முடக்கிவிட்டு வருகிறோம். சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம். சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது, என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : Prakash ,Chennai , Chennai, Corona, Corporation Commissioner Prakash
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்